பெங்களூரு நகரின் அதிகரித்து வரும் பணவீக்கமும், அங்கு வாழ்வதற்கான அதிகப்படியான செலவுகளும் துணி இஸ்திரி செய்யும் கட்டணம் மூலம் மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

நொய்டாவிலிருந்து பெங்களூருவின் இந்திராநகர் பகுதிக்குக் குடிபெயர்ந்த சஜித் பாய் என்பவர், தனது எக்ஸ் (X) தளப் பதிவில் இந்த அதிர்ச்சிகரமான விலை வித்தியாசத்தைப் பகிர்ந்துள்ளார்.

நொய்டாவில் ஒரு துணியை இஸ்திரி செய்ய 5 ரூபாய் மட்டுமே வாங்கிய நிலையில், பெங்களூருவில் அதற்கு 12 முதல் 20 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெங்களூருவில் வீட்டு வாடகை மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான செலவுகள் அதிகம் என்பது தெரிந்ததே என்றாலும், இஸ்திரி போன்ற எளிய சேவைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை வாங்குவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் கூடுதல் கட்டணத்திற்கு வட இந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையே பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வித்தியாசமே காரணம் என்று சஜித் விளக்கியுள்ளார்.

நொய்டா போன்ற வட இந்தியப் பகுதிகளில் இப்போதும் விலை மலிவான நிலக்கரி இஸ்திரிப்பெட்டிகள் பயன்படுத்தப்படுவதால் செலவு குறைவாக இருக்கிறது; ஆனால் பெங்களூருவில் எல்.பி.ஜி (LPG) கேஸ் மூலம் இயங்கும் இஸ்திரிப்பெட்டிகளே அதிகம் பயன்படுத்தப்படுவதால், அந்த எரிவாயுவின் கூடுதல் செலவு வாடிக்கையாளர்கள் தலையிலேயே சுமத்தப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“>

 

இவரின் இந்த சுவாரஸ்யமான பதிவைத் தொடர்ந்து, பெங்களூருவின் மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களும் தங்களின் பகுதிக்கு ஏற்றவாறு நிலவும் அதிகப்படியான இஸ்திரி கட்டண அனுபவங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.