நெல்லை மாவட்டத்தில் 11 வயது வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த மாதம் 12-ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 35 வயது தொழிலாளியைக் கைது செய்தனர்.

இந்த வழக்கில் போலீசார் காட்டிய துரித நடவடிக்கையினால், வெறும் 5 நாட்களிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அந்த நபருக்குச் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனையும், 28 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 29 நாட்களுக்குள்ளேயே இந்த இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது, குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் காலதாமதத்தைத் தவிர்க்கும் ஒரு முக்கிய முன்னுதாரணமாகவும் பார்க்கப்படுகிறது.