
வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை கடந்த சில ஆண்டுகளாகவே மக்களை பெரிதும் பாதித்துவந்தது. இந்த நிலையில், கனரா வங்கியைத் தொடர்ந்து, மேலும் 5 பொதுத்துறை வங்கிகள் தற்போது இந்த அபராதத்தை ரத்து செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
2020ஆம் ஆண்டிலேயே பாரத ஸ்டேட் வங்கி (SBI) இந்த அபராத விதிமுறையை நீக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பரோடா வங்கி (Bank of Baroda), இந்தியன் வங்கி, மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India) ஆகியவையும் இந்த வகைச் சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்பு விதிமுறையை நீக்கியுள்ளன.
இது ஏழை, நடுத்தர மக்களுக்கு பெரிய நிவாரணமாக அமைகிறது. பலர் சேமிப்புக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வைத்திருப்பதையே பெரிதாகக் கருதுகிறார்கள். ஆனால், வங்கி சேவைக் கட்டணங்கள் பிடித்தம் செய்யப்பட்டதும் அந்தத் தொகை குறைவடைந்து, குறைந்தபட்ச இருப்பில்லை என்பதற்காக மீண்டும் அபராதம் பிடித்து, கணக்கிலிருக்கும் முழு தொகையும் முடிவடையும் நிலை ஏற்பட்டிருந்தது.
தற்போது, இந்த அபராத நடைமுறை ரத்து செய்யப்பட்டிருப்பதால், சேமிப்புக் கணக்குகள், சம்பள கணக்குகள், வெளிநாடுவாழ் இந்தியர் (NRI) கணக்குகள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளுக்கும் இது வரவேற்கத்தக்க மாற்றமாக அமைந்துள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க தவறினாலும் அபராதம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதன் மூலம், வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மீது நம்பிக்கையும் நிம்மதியும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த தீர்மானம் மேலும் பல வங்கிகளிலும் விரைவில் அமலாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.