மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு ஜெ. தீபா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக தலைமை மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்துப் பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்தார்.
“ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்க எடப்பாடி பழனிசாமியை பலமுறை சந்திக்க முயன்றேன். ஆனால், அவர் எனக்கு அனுமதி வழங்கவில்லை; என்னை மதிக்கவும் இல்லை. என்னைத் தவிர்ப்பதற்கும் ஒதுக்குவதற்கும் அவர் யார்?” என்று தீபா ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சி இருக்குமா என்பதே சந்தேகம் தான் என்றும், தற்போதைய அதிமுக முன்பிருந்தது போல முழு வீச்சில் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய தீபா, “விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்கிறேன். தற்போது மேடைகளில் அவர் பேசி வருபவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா பேசியவை தான். அதிமுகவை அவர் ஒரு பொருட்டாக நினைக்காதது நியாயமானது தான். விஜய் அதிமுகவின் வாக்குகளை மட்டுமல்லாமல், அனைத்துக் கட்சிகளின் வாக்குகளையும் பிரிப்பார்” என்று குறிப்பிட்டார்.
மத்தியில் உள்ள என்டிஏ கூட்டணி வெற்றி பெற ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்று கூறிய தீபா, டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியின் சம்மதத்துடன் தான் அந்தக் கூட்டணியில் இணைந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினார். “மக்கள் இவர்களைக் கண்டு வெறுத்துப் போய்விட்டார்கள். வரும் தேர்தல்களில் அதிமுக படுதோல்வியைச் சந்திக்கும்” என்றும் அவர் எச்சரித்தார்.
“நான் இன்னும் அரசியலில் தான் இருக்கிறேன். சசிகலா புதிய கட்சி தொடங்கட்டும், அதற்காகக் காத்திருக்கிறேன்” என்று கூறிய தீபா, அதிமுகவின் சொத்துக்கள் அதன் தொண்டர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் தெரிவித்தார். ஜெயலலிதாவின் வாரிசாக அறியப்படும் தீபா, விஜய்க்கு ஆதரவாகவும் அதிமுக தலைமைக்கு எதிராகவும் பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
