மும்பை மாநகராட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நீண்ட காலத்திற்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளது மகாராஷ்டிர அரசியலில் பெரும் திருப்புமுனையமும்பை மாநகராட்சித் தேர்தல் வரும் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) மற்றும் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) ஆகிய கட்சிகள் கைகோர்த்துள்ளன. பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த சகோதரர்கள் தற்போது ஒன்றுபட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள
நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராஜ் தாக்கரே, மொழி உணர்வைத் தூண்டும் வகையில் ஆவேசமாக உரையாற்றினார். அவர் பேசியதாவது: “மகாராஷ்டிர மண்ணில் இந்தியை யாராவது திணிக்க முயன்றால், அவர்களுக்குத் தக்க ‘உதை’ விழும். நமது மொழியும், நிலமும் பறிபோய்விட்டால் மராட்டியர்களின் அடையாளமே அழிந்துவிடும். மொழிக்காக மராட்டியர்கள் அனைவரும் ஜாதி, மதம் கடந்து ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.
மராத்தியர்களுக்கான கடைசி தேர்தல் இதுதான். இந்த அரிய வாய்ப்பை இன்று நீங்கள் தவறவிட்டால், எதிர்காலத்தில் உங்கள் அடையாளம் கேள்விக்குறியாகிவிடும். மராத்தி மொழி மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் பெருமையைக் காக்க அனைவரும் ஒன்றுபடுங்கள். இந்தி என்பது உங்கள் சொந்த மொழி அல்ல என்பதை உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உணர வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் தாக்கரே சகோதரர்களின் இந்தக் கூட்டணி, மும்பை மாநகராட்சியை நீண்டகாலமாகக் கைப்பற்றி வைத்திருக்கும் சக்திகளுக்குப் பெரும் சவாலாக அமையும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, வெளிமாநிலத்தவர் மற்றும் இந்தி பேசும் மக்களின் வாக்குகள் அதிகமுள்ள மும்பையில், ராஜ் தாக்கரேவின் இந்தப் பேச்சு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
