தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் சூழலில், திடீரென திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தது தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்த காலம் வரை, ஷீரடி சாய்பாபா கோயிலைத் தவிர்த்து வேறெந்த இந்து மதக் கோயில்களுக்கும் விஜய் சென்றதாகத் தகவல்கள் இல்லை.
ஆனால், தற்போது அரசியல் கட்சித் தொடங்கித் தேர்தலைச் சந்தித்துள்ள நிலையில், அவர் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகனை வழிபட்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளைக் கவரும் முயற்சியோ என அரசியல் விமர்சகர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
விஜய்யின் இந்த கோயில் வருகைக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. குறிப்பாக, மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்து கோயில்களுக்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு பழனி முருகன் கோயில் விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழங்கிய தீர்ப்பு தற்போது சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது.
1947-ஆம் ஆண்டின் ஆலய நுழைவு அதிகாரச் சட்டத்தின்படி, இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழையத் தடை இருப்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்கு வந்தால், அவர்களை ‘கொடிமரத்தைத் தாண்டி’ அனுமதிக்கக் கூடாது என்ற அறிவிப்புப் பலகையை வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய வேண்டுமெனில், குறிப்பிட்ட கடவுள் மீது நம்பிக்கை இருப்பதாகவும், இந்து மதச் சடங்குகளைப் பின்பற்றுவதாகவும் உறுதிமொழிக் கடிதம் எழுதிக்கொடுத்த பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும்.
திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் விஜய்யிடம் இத்தகைய உறுதிமொழியைப் பெற்றதா அல்லது விஐபி (VIP) அந்தஸ்து அடிப்படையில் அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டாரா என்ற கேள்வியை இந்து அமைப்புகள் எழுப்பியுள்ளன. மேலும் இச்சம்பவம் தமிழக அரசியலில் ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘ஆன்மிக அரசியல்’ குறித்த புதிய விவாதத்தை மீண்டும் ஒருமுறை முன்னெடுத்துள்ளது.
