இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் மிக உயரிய விருதான ‘ரஞ்சி கோப்பை’ வரலாற்றில் ஜம்மு காஷ்மீர் அணி புதிய சரித்திரம் படைத்துள்ளது. பலம் வாய்ந்த கர்நாடக அணியை வீழ்த்தி, தனது 67 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது பராஸ் டோக்ரா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அணி.

2025-26 ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஜம்மு காஷ்மீர் – கர்நாடகா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்த போதிலும், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணி, முதல் இன்னிங்ஸில் மலைக்கத்தக்க வகையில் 584 ரன்களைக் குவித்தது. ஷுபம் பண்டிர் அபாரமாக விளையாடி 121 ரன்கள் எடுத்தார். யாவர் ஹசன்  88 ரன்கள் எடுத்து வலு சேர்த்தார். கேப்டன் பராஸ் டோக்ரா (70) மற்றும் அப்துல் சமத் (61) ஆகியோரும் முக்கியப் பங்காற்றினர்.

தொடர்ந்து ஆடிய கர்நாடக அணி, ஜம்மு காஷ்மீரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணியின் கேப்டன் மயாங்க் அகர்வால் (160) மட்டும் போராடினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், கர்நாடகா 293 ரன்களுக்குச் சுருண்டது. இந்த சீசன் முழுவதும் ஜம்மு காஷ்மீர் அணியின் வெற்றிக்குத் தூணாக விளங்கிய வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபி தர், இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த சீசனில் மட்டும் அவர் மொத்தம் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

 

291 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜம்மு காஷ்மீர் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் டிராவாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் கம்ரான் இக்பால் (160) மற்றும் சாஹில் லோத்ரா (101) ஆகியோர் சதம் விளாசினர். கடந்த 1959-60 ஆம் ஆண்டு முதல் ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்று வரும் ஜம்மு காஷ்மீர் அணி, இதுவரை ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில்லை. தற்போது 67 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது மட்டுமன்றி, கோப்பையையும் வென்று சாதனைப் படைத்துள்ளது. இமேலும் ந்த வெற்றி ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பொற்காலமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் ரஞ்சிக் கோப்பையை வென்ற காஷ்மீர் அணைக்கு பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.