10-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, நமீபியாவை எதிர்கொள்கிறது.

அமெரிக்காவுக்கு எதிரான முந்தைய போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாதது இந்திய அணிக்குச் சற்றே பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியில் இந்திய முன்வரிசை பேட்ஸ்மேன்கள் தங்களது ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா குணமடைந்து திரும்பியுள்ளார். எனினும், அவர் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பது குறித்து கடைசி நேரத்தில் முடிவு செய்யப்படும். அவர் விளையாடாவிடில் சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த நமீபிய கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ், ஐசிசி மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது:

“இந்த முக்கியமான ஆட்டத்திற்கு முன்னதாக இந்தியாவுக்கு இரண்டு இரவுகள் பயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு ஒரு இரவு நேரப் பயிற்சி கூட ஒதுக்கப்படவில்லை. இதில் உள்ள உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை; இதிலிருந்தே நீங்கள் உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.

நமீபிய கேப்டனின் இந்த ஆதங்கத்திற்குப் பின்னால் ஒரு முக்கியக் காரணம் உள்ளது. பாலைவனப் பகுதிகள் அதிகம் கொண்ட நமீபியாவில் கால்பந்து மற்றும் ரக்பி விளையாட்டுக்களே பிரபலம். அங்கு கிரிக்கெட் அசுர வளர்ச்சி கண்டு வந்தாலும், அந்நாட்டில் உள்ள வாண்டரர்ஸ் உள்ளிட்ட முக்கிய மைதானங்களில் இரவு நேரப் போட்டிகளை நடத்தும் அளவுக்கு ‘பிளட் லைட்’ (Floodlights) வசதிகள் கிடையாது.

இதனால், நமீபிய வீரர்கள் தங்கள் நாட்டில் பகல் நேரங்களில் மட்டுமே விளையாடிப் பழகியவர்கள். சர்வதேச அளவில் இரவு நேரப் போட்டிகளில் மின்விளக்கு வெளிச்சத்தில் வரும் பந்தைக் கணிப்பது இவர்களுக்குப் பெரும் சவாலாகும். இந்தியா போன்ற நாடுகளில் இந்தப் பயிற்சியைப் பெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கேயும் அனுமதி மறுக்கப்பட்டதே எராஸ்மஸின் கோபத்திற்குக் காரணம்.

இருப்பினும், தங்களது தன்னம்பிக்கை குறையவில்லை என எராஸ்மஸ் தெரிவித்தார். “அமெரிக்கா போன்ற சிறிய அணிகளின் வெற்றிகள் எங்களுக்கு ஊக்கமளிக்கின்றன. மைதானத்தில் இருக்கும் கூட்டத்தைப் பார்த்தோ, எதிரணியின் பலத்தைக் கண்டோ நாங்கள் அஞ்சமாட்டோம். எங்களுக்கே உரிய பாணியில் போராடி வெற்றிக்காகப் போராடுவோம்” என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

இன்றைய போட்டியில் பலம் குறைந்த நமீபியாவை வீழ்த்தி, இந்திய அணி ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.