டி20 உலகக் கோப்பைத் தொடரின் தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் இந்திய அணி இன்று நமீபியாவை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்திய உற்சாகத்தில் இந்தியா களம் இறங்கினாலும், வீரர்களின் திடீர் காயங்கள் அணி நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.
இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா இன்னும் முழுமையான உடல் தகுதியை எட்டவில்லை. அவரது பங்கேற்பு குறித்து இன்று இறுதி நேரத்தில் முடிவு எடுக்கப்படும். ஒருவேளை அவர் விளையாடாவிட்டால், சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறுவார்.
அதேபோல், வலைப்பயிற்சியின் போது ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்து இஷான் கிஷனின் காலில் பலமாகத் தாக்கியது. இதனால் அவர் வலியால் துடித்தார். அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவர் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகமாகவே உள்ளது.
அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவருமே விளையாடாத பட்சத்தில், இந்திய அணியின் தொடக்க வீரராக யார் களம் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சில தகவல்களின்படி, சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை தொடக்க வீரராகக் களம் இறக்க தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் சிராஜ் சிறப்பாகச் செயல்பட்டதால், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு இன்றும் ஓய்வு வழங்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், அவர் வலைப்பயிற்சியில் தீவிரமாகப் பந்து வீசி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் காரணமாக இன்றைய தினம் நடைபெறும் போட்டியில் யார் விளையாடுவார்கள் போட்டி எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணி:
சஞ்சு சாம்சன், இஷான் கிஷன்/வாஷிங்டன் சுந்தர், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.
நமீபிய அணி:
லோரன் ஸ்டீன்கேம்ப், ஜான் பிரிலிங்க், ஜான் நிக்கோல் லாஃப்டி-ஈடன், கெர்ஹார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), ஜேஜே ஸ்மிட், ஸேன் கிரீன் (விக்கெட் கீப்பர்), டைலன் லீச்சர், ரூபன் ட்ரம்பல்மேன், வில்லெம் மைபர்க், பெர்னார்ட் ஷோல்ட்ஸ், மேக்ஸ் ஹெய்ங்கோ.
