2026-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில், இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பாகிஸ்தானின் சமீர் மின்ஹாஸ் ஆகிய இரு இளம் வீரர்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

வைபவ் தென்னாப்பிரிக்க மண்ணில் ரன்களைக் குவித்து வரும் வேளையில், சமீர் ஜிம்பாப்வே தொடரில் 360 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவர்களது ஆட்டத்திறன் மட்டுமின்றி, இவர்கள் பயன்படுத்தும் பேட்களும் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளன.

வைபவ் ‘SS’ ரக பேட்டைப் பயன்படுத்துகிறார், சமீர் ‘MB Malik’ ரக பேட்டைப் பயன்படுத்துகிறார். விலையைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் வீரர் சமீர் மின்ஹாஸ் பயன்படுத்தும் மாலிக் பேட் சுமார் 1.20 லட்ச ரூபாய்க்கும் மேல் மதிப்புடையது என்று கூறப்படுகிறது.

அதே சமயம், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி பயன்படுத்தும் SS பேட்டின் விலை 25,000 முதல் 50,000 ரூபாய் வரை இருக்கும் எனத் தெரிகிறது. வைபவ் பயன்படுத்தும் பேட் சுமார் 1150 கிராம் எடை கொண்டது.

இரண்டுமே உயர்தரமான ‘இங்கிலீஷ் வில்லோ’ மட்டைகள் என்றாலும், விலையில் இவ்வளவு பெரிய வித்தியாசம் இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.