சொந்த மண்ணில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையிலும், இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன் இந்திய அணியின் திறமை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இந்தப் பட்டத்தை வென்றிருக்கலாம், ஆனால் இந்தத் தொடரின் “சிறந்த அணி” இந்தியா அல்ல, தென்னாப்பிரிக்காதான் என்று அவர் கூறியுள்ளார். சூப்பர் எட் சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டிய ஹார்மிசன், இந்தியா ஒரு “தருணங்களுக்கான அணி” (Moments team) என்றும், முக்கியமான நேரங்களில் சில வீரர்கள் ஜொலித்ததால் மட்டுமே அவர்களால் வெல்ல முடிந்தது என்றும் விமர்சித்துள்ளார்.

குறிப்பாக, பும்ரா, அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் தனிப்பட்ட சிறப்பான ஆட்டமே இந்தியாவை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் தொடர் ஆதிக்கம் குறித்துப் பேசிய ஹார்மிசன், ஐசிசியை விட பிசிசிஐ அதிக சக்தி வாய்ந்ததாக இருப்பதே இந்தியாவின் வெற்றிக்கு மறைமுகக் காரணம் என்று சாடியுள்ளார். இந்தியாவில் தொடர்ச்சியாக ஐசிசி தொடர்கள் நடத்தப்படுவதால், இந்திய அணிக்குச் சொந்த மண் சாதகம் கிடைப்பதாகவும், இது மற்ற அணிகளுக்குச் சமமான வாய்ப்பை வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
2023 ஒருநாள் உலகக்கோப்பை முதல் தற்போது வரை விளையாடிய 33 போட்டிகளில் இரண்டில் மட்டுமே இந்தியா தோற்றுள்ள போதிலும், இந்திய அணியின் இந்த ஆதிக்கம் திறமையால் மட்டுமே வந்தது அல்ல என்ற ஹார்மிசனின் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
