2026 டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்று சூடுபிடித்துள்ள நிலையில், ஆசியாவின் ஜாம்பவானான இந்திய அணிக்கு எதிராக ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை கிரிக்கெட் உலகையே அதிரவைத்துள்ளது. “இந்தியாவுக்கு மரண பயத்தைக் காட்டுவோம்” என்று அவர் கொடுத்துள்ள வார்னிங், ஏற்கனவே தென்னாப்பிரிக்காவிடம் அடி வாங்கித் தவிக்கும் இந்திய ரசிகர்களைப் பீதியடையச் செய்துள்ளது. “நாங்கள் 10 ஆண்டுகளாக இந்தியாவில் விளையாடவில்லை என்பது ஒரு சாக்குப்போக்கே கிடையாது; ஆஸ்திரேலியாவையே வீழ்த்திய எங்களுக்கு இந்தியா ஒரு பெரிய சவாலே அல்ல” என ராசா சீறியுள்ளார்.

​குரூப் ஸ்டேஜில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பலமான அணிகளைத் துவம்சம் செய்துவிட்டு, தற்போது ‘ஜயண்ட் கில்லர்ஸ்’ ஆக உருவெடுத்துள்ள ஜிம்பாப்வே, திங்கட்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவுடன் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அனுபவத்தைக் கொண்டு, இந்திய பவுலர்களின் பலவீனங்களை உடைக்க ராசா பக்கா பிளான் போட்டுள்ளார். “யாரும் எங்களை செமி-பைனலிஸ்ட் என்று கணிக்கவில்லை; ஆனால் அந்த ஒரு இடத்தைப் பிடிக்க நாங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுவோம்” என்று அவர் கூறியிருப்பது, இந்திய அணிக்கு விடப்பட்ட நேரடி மிரட்டலாகவே பார்க்கப்படுகிறது.

​ஏற்கனவே ‘சேஸிங்’ செய்யத் தெரியாமல் தென்னாப்பிரிக்காவிடம் சரணடைந்த இந்திய அணிக்கு, ஜிம்பாப்வேயின் இந்தத் தன்னம்பிக்கை மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்துள்ளது. ரோஹித் – விராட் இல்லாத வெற்றிடத்தை இந்திய இளம் வீரர்கள் நிரப்பத் தவறி வரும் நிலையில், சிக்கந்தர் ராசாவின் இந்த ‘வார்னிங்’ வெறும் பேச்சு தானா அல்லது இந்தியாவை உலகக்கோப்பையை விட்டு வெளியேற்றும் ஒரு மாஸ்டர் பிளானா என்பது திங்கட்கிழமை தெரிந்துவிடும்.