தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 187 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி வெறும் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இந்தத் தோல்வி குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இந்திய வீரர்களிடம் அதிகப்படியான ‘ஈகோ’ மற்றும் ‘ஓவர் கான்ஃபிடென்ஸ்’ இருப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். தென்னாப்பிரிக்க வீரர்கள் ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு நிதானமாக ஆடிய போது, இந்திய வீரர்கள் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்குத் தூக்க முயன்று விக்கெட்டுகளைத் தாரை வார்த்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் டேவிட் மில்லர் மற்றும் பிரீவிஸ் ஆகியோரின் சிறப்பான பார்ட்னர்ஷிப்பைப் பார்த்து இந்திய வீரர்கள் பாடம் கற்க வேண்டும் என கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். சிவம் துபே மட்டும் ஓரளவுக்குப் போராடி 42 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இந்தியா தனது அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.
