2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. குரூப் ஸ்டேஜில் பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற அணிகளை வீழ்த்தி அசைக்க முடியாத பலத்துடன் இருந்த இந்தியா, சூப்பர் 8-ல் தென்னாப்பிரிக்காவிடம் மோசமாகச் சறுக்கியுள்ளது. இந்தத் தோல்வி குறித்துப் பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர், இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற அனுபவமிக்க வீரர்களின் தேவை இப்போதுதான் உணரப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இக்கட்டான சூழ்நிலைகளில் ஆட்டத்தைக் கொண்டு செல்லும் கலை அவர்களுக்குத் தெரிந்திருந்தது, ஆனால் தற்போதைய வீரர்களிடம் அது மிஸ் ஆகிறது என அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் உள்ள ஒரு பெரிய தவறையும் அமீர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அணி இடது கை பேட்டர்களை (Left-handed batters) அடுத்தடுத்து வரிசையாகக் களமிறக்குவதாகவும், இதைச் சாதகமாகப் பயன்படுத்தும் எதிரணிகள் அவர்களுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னர்களை (Off-spinners) வீசி விக்கெட்டுகளைச் சுலபமாக வீழ்த்திவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். 180 ரன்கள் போன்ற இலக்குகளைத் துரத்தும்போது ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுவது இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடுகிறது என அவர் விமர்சித்துள்ளார்.
