இந்தியாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறிய கருத்து ஒன்றைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற பெயரில் உருவான இணையப் பக்கம் பெரும் வைரலானது. இளைஞர்களின் ஒரு பகுதியினரை கரப்பான் பூச்சிகளோடு ஒப்பிட்டுப் பேசியதாகக் கருதப்பட்ட அந்த விவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் தொடங்கப்பட்ட இந்த ஆன்லைன் இயக்கம், ஆளும் கட்சியையே வியக்க வைக்கும் வகையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த இந்திய இணையப் போக்கு தற்போது அண்டை நாடான பாகிஸ்தானிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு ‘கரப்பான் பூச்சி அவாமி கட்சி’ மற்றும் ‘கரப்பான் பூச்சி அவாமி லீக்’ எனப் பல புதிய பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவை இந்தியாவில் தொடங்கிய இயக்கத்தைப் பின்பற்றித் தாங்கள் உருவாக்கப்பட்டதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டாலும், தங்கள் நோக்கம் பாகிஸ்தான் இளைஞர்களின் உண்மையான குரலாக ஒலிப்பதே தவிர, எந்தவொரு தனிநபர் அல்லது அணியுடனும் தங்களுக்குத் தொடர்பில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளன.
