வியட்நாம் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இந்திய சுற்றுலாப் பயணிகள் கர்பா நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. வியட்ஜெட் ஏர் விமானத்திற்கு அருகிலேயே இந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக நடனமாடிய காட்சிகள், விமான நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை மீறிய செயலாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் பொது இடங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது தவறல்ல என்றாலும், விமான நிலையம் போன்ற பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது பொருத்தமற்றது என்று நெட்டிசன்கள் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் செயல் வெளிநாடுகளில் இந்தியர்களுக்கான நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக ஒரு தரப்பினர் கடுமையாகச் சாடியுள்ளனர். கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவது பெருமைக்குரிய விஷயம் என்றாலும், பொது இடங்களில், குறிப்பாக சர்வதேச பயணங்களின் போது இடத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்வது அவசியம் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் சுற்றுலாப் பயணிகளிடையே எதிர்மறையான பிம்பத்தை உருவாக்குவதாகவும், இது இந்தியர்களின் நற்பெயரைக் குறைப்பதாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் வெடித்துள்ளன.