உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் அதிர்ச்சியூட்டும் வகையில், 18 ஆண்டுகளாகத் தாயை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ‘வெளிநாட்டு பாபா’வை, மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த அந்த நபர், பல ஆண்டுகளாகத் தாய்க்குத் தாந்திரீக சிகிச்சை அளிப்பதாகக் கூறி அவரைத் தன் வசப்படுத்தியிருந்தார்.

மேலும் பாபாவின் பிடியிலிருந்து தாயை மீட்கும் முயற்சியில் பலமுறை தோல்வியடைந்த மகன், இறுதியில் அந்த பாபாவைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தான். இதற்காகத் திட்டமிட்டு, அந்தப் பாபாவைக் கொலை செய்ததோடு, அதற்கான ஆயுதத்தையும் மறைத்து வைத்திருந்தான்.

இதனால் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, தீவிர விசாரணைக்குப் பிறகு அந்த மகனைக் கைது செய்துள்ளது. நீண்ட காலமாகக் குடும்பத்தைச் சிதைத்து வந்த பாபாவின் பிடியிலிருந்து தாயை மீட்பதற்காகத் தான் இந்தக் கொடூரமான முடிவை எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு தாயின் அடிமைத்தனம் மற்றும் குடும்பத்தின் மன உளைச்சலால் ஏற்பட்ட இந்தக் கொலைச் சம்பவம், சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இக்கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.