உலகின் முன்னணி கோடீஸ்வரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க்கிற்கு, சோமாலி-அமெரிக்க பெண் ஒருவர் நேரலை வீடியோவில் கொலை மிரட்டல் விடுத்துள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளமான ‘டிக்டாக்’ (TikTok) நேரடி ஒளிபரப்பின் போது, பர்தா அணிந்த சோமாலி-அமெரிக்க பெண் ஒருவர் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அமெரிக்காவின் மினசோட்டாவில் சோமாலியர்கள் நடத்தும் வணிகங்கள் மற்றும் பராமரிப்பு மையங்களில் நடைபெறும் மோசடிகள் குறித்து மஸ்க் அண்மையில் விமர்சித்திருந்தார்.

 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்தப் பெண், மஸ்க் இனவெறியுடன் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். தனது தாய்மொழியில் பேசிய அவர், இடையில் ஆங்கிலத்தில், “நான் அவரைப் பற்றி கவலைப்படப் போவதில்லை… அவர் விரைவில் இறக்கப் போகிறார்” என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

தன்னைப் பற்றிய இந்த வைரல் வீடியோவிற்கு தனது ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் எலான் மஸ்க் நேரடியாகப் பதிலளித்துள்ளார். அந்தப் பெண்ணின் பேச்சைக் கிண்டல் செய்யும் விதமாக, “அற்புதமான மனிதர்கள்” என்று குறிப்பிட்ட அவர், அதன் தொடர்ச்சியாக, “அப்படியென்றால் இது போர் தான்” (Then it is war) என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அரசியலில் குடியேறியவர்களின் தலையீடு குறித்து எலான் மஸ்க் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறார். குறிப்பாக, சோமாலியாவிலிருந்து குடியேறிய காங்கிரஸ் பிரதிநிதி இல்ஹான் உமர் மற்றும் உகாண்டாவிலிருந்து குடியேறிய ஜோஹ்ரான் மம்தானி ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து அவர் அண்மையில் விமர்சித்திருந்தார்.

அமெரிக்க மண்ணில் பிறக்காதவர்களின் அரசியல் ஆதிக்கம் அதிகரித்தால், நாடு கம்யூனிசத்தின் பிடியில் சிக்கிவிடும் என்று மஸ்க் ஒரு நேர்காணலில் எச்சரித்திருந்தார். இந்தச் சூழலில், சோமாலி-அமெரிக்க பெண் மஸ்க்கிற்கு மிரட்டல் விடுத்திருப்பது விவாதங்களை உருவாக்கியுள்ளது.