இது பிசிசிஐயின் போட்டி, ஐசிசி அல்ல என்று பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் சாடியுள்ளார்.

2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பையில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 2 மணிக்கு மோதியது. 1,32,000 பேர் அமரும் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவிற்கே ஆதரவு அதிகமாக இருந்தது. மைதானமே நீலக்கடல் போல காட்சியளித்தது. மிகவும் முக்கியமான   போட்டியில் கலந்து கொள்ள ஒரு சில பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சொந்த அணியானது (இந்தியா) அதிகபட்சமாக பார்வையாளர்களின் ஆதரவுடன் களமிறங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 191 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்களும், முகமது ரிஸ்வான் 49 ரன்களும், இமாம் உல் ஹக் 36 ரன்களும், அப்துல்லா ஷபீக் 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீவ் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் 30.3 ஓவர்களில் 192 ரன்கள் என்ற இலக்கை துரத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 63 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர் உட்பட 86 ரன்கள் எடுத்தார்.  மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (53*) ஆகியோர் சிறப்பாக ஆடினர். மேலும் கே.எல் ராகுல் 19* ரன்களும், சுப்மன் கில் மற்றும் விராட் கோலி தலா 16 ரன்களும் எடுத்தனர்.. பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது. மேலும் இதன் மூலம் ஒருநாள் உலக கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது இந்திய அணி.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர், இது இருதரப்பு தொடர் போன்றது என்று உணர்ந்தார். “இது ஒரு ஐசிசி நிகழ்வாகத் தெரியவில்லை, இது ஒரு இருதரப்பு தொடர் போலவும், பிசிசிஐ நிகழ்வைப் போலவும் தோன்றியது” என்று போட்டிக்குப் பிறகு ஆர்தர் கூறினார்..

மிக்கி ஆர்தர் கூறியதாவது, வழக்கமாக, ஒவ்வொரு ஐசிசி நிகழ்விலும், எல்லைக்கு அப்பாற்பட்ட ரசிகர்கள் தங்கள் அணியை உற்சாகப்படுத்த அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். ஆனால் இந்த முறை முற்றிலும் மாறுபட்டது. நேர்மையாகச் சொல்வதென்றால், இன்றிரவு (நேற்று) நடந்த போட்டி ஐசிசி நிகழ்வாகத் தெரியவில்லை, இது இருதரப்புத் தொடராகவோ, பிசிசிஐ நிகழ்வாகத் தோன்றியது. 

“தில் தில் பாகிஸ்தான்’ ஒலிவாங்கிகள் மூலம் அடிக்கடி வருவதை நான் கேட்கவில்லை. அதுபோட்டியில்  ஒரு ரோலை வகிக்கிறது, ஆனால் நான் அதை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தவில்லை, ஏனென்றால் எங்களைப் பொறுத்தவரை, இது இந்த தருணங்கள் தான் முக்கியம், அடுத்த பந்தைப் பற்றியது மற்றும் இன்றிரவு இந்திய வீரர்களை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது பற்றியது, ”என்று கூறினார்.

பிக் டிக்கெட் நிகழ்வுக்கு ரசிகர்களுக்கு விசா வழங்கப்பட்டிருக்க வேண்டுமா என்று கேட்டதற்கு, ஆர்தர்  புன்னகையுடன், நான் அப்படி எதாவது பேசி எனக்கு அபராதம் விதிக்கப்படுவதை விரும்பவில்லை. இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்தார்.. மேலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியதாகவும் அவர் கூறினார்.. அதாவது மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவில் இல்லாததை குறை கூறியுள்ளார் ஆர்தர்..