பொதுவாக கடும் வெப்பமும் வறண்ட பாலைவன காலநிலையும் நிலவும் சவுதி அரேபியா, சமீபத்தில் பனிப்பொழிவு, கனமழை மற்றும் உறைபனி வெப்பநிலையுடன் கூடிய அசாதாரண குளிர்காலத்தை அனுபவித்து வருகிறது. இந்த அரிய வானிலை மாற்றம் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியதுடன், பல பகுதிகளில் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட அதிகாரிகளைத் தூண்டியுள்ளது.

வழக்கத்திற்கு மாறாக, வடக்கு சவுதி அரேபியாவின் தபுக் மாகாணத்தில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. சுமார் 2,600 மீட்டர் உயரமுள்ள ஜெபல் அல்-லாஸ் உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகள் பனியால் முழுமையாக மூடப்பட்டன. அதேபோல், மலைப்பாங்கான ட்ரோஜெனா பகுதியில் லேசான மழையுடன் கூடிய பனிப்பொழிவு ஏற்பட்டது. இக்காட்சிகள் அரேபிய தீபகற்பத்தை விட ஐரோப்பிய ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளை நினைவூட்டும் வகையில் காணப்பட்டன.

 

ஹெயில் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட ஹெயில் மாகாணத்திலும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இது சவுதி அரேபியாவில் மிகவும் அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது. பல இடங்களில் அதிகாலை நேரத்தில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ்க்கும் கீழ் சரிந்ததால், உயரமான பகுதிகளிலும் திறந்த வெளி நிலப்பரப்புகளிலும் பனி படிந்தது.

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, மத்திய மற்றும் வடக்கு சவுதி அரேபியாவில் வலுவான குளிர் காற்று நிறை புகுந்ததே இந்த உறைபனி நிலைமைகளுக்கு காரணமாகும்.
பனிப்பொழிவுடன் சேர்ந்து, பல பகுதிகளில் மாறுபட்ட அளவில் மழையும் பெய்துள்ளது. பிர் பின் ஹெர்மாஸ், அல்-அய்னா, அம்மார், ஷக்ரா மற்றும் அல்உலா ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பதிவானது. இதேவேளை, ரியாத், காசிம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைநகரின் வடக்கே உள்ள அல்-மஜ்மா மற்றும் அல்-காட் பகுதிகளிலும் பனிப்பொழிவு உறுதி செய்யப்பட்டுள்ளது. குளிர்ந்த காற்று ஓட்டங்களும் மழை மேக அமைப்புகளும் ஒன்றிணைந்ததன் காரணமாக இந்த அசாதாரண வானிலை உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் குறைந்த வெப்பநிலை தொடரக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்ட வேண்டும் என்றும், வெள்ள அபாயம் உள்ள பள்ளத்தாக்கு பகுதிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பனி மூடிய சவுதி மலைப்பகுதிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அரிய காட்சியைக் காண மக்கள் அதிக ஆர்வம் காட்டினாலும், இதுபோன்ற அசாதாரண வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருவது காலநிலை மாற்றம் குறித்த கவலைகளை எழுப்புவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.