கலிஃபோர்னியாவின் சான் ராஃபெல் நகரில் ஒரு வன்மமான பழுப்பு அணில் கடுமையான தாக்குதல்களை நடத்தி, குடியிருப்பாளர்களுக்கு புதிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த அணில் கடந்த சில நாட்களில் குறைந்தது இரண்டு பேரை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக உள்ளூர் மிருகங்கள் பாதுகாப்பு அமைப்பான மரின் ஹ்யூமேன் தெரிவித்துள்ளது. சான் ராஃபெல் நகரின் டயப்லோ சர்க்கிள் மற்றும் மவுண்ட் லாசென் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்துள்ளன.

இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் அணில் படத்துடன் எச்சரிக்கை காகிதம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. அந்த காகிதத்தில், “இது விளையாட்டல்ல. கடந்த சில நாட்களில் ஐந்துக்கும் மேற்பட்டோர் வன்மமான அணிலால் தாக்கப்பட்டுள்ளனர். பலர் கடுமையான காயங்களுக்காக அவசர மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்” என்று எழுதப்பட்டுள்ளது. அணில்களுக்கு மக்கள் உணவளிப்பதே இந்த அசாதாரண நடத்தைக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மரின் ஹ்யூமேனின் சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பு இயக்குநர் லிசா பிளாக் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “சான் ராஃபெல் நகரின் ஒரு குடியிருப்புப் பகுதியில் அணிலால் தாக்கப்பட்ட இரண்டு புகார்களைப் பெற்றுள்ளோம். அணிகளுக்கு இது சாதாரண நடத்தை அல்ல; யாராவது அதற்கு உணவளித்ததே காரணம்” என்று கூறினார். மேலும், “மனிதர்கள் வனவிலங்குகளுக்கு உணவளிப்பதால், அவை இயல்பான பயத்தை இழந்து தைரியமாக நடந்து கொள்கின்றன.

இதனால், மக்களுக்கும் விலங்குகளுக்கும் தீமைகள் ஏற்படும். எனவே, வனவிலங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம்” என்று எச்சரித்தார். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில், ஜோன் ஹெபிளாக் சான் ராஃபெல் லூகாஸ் வேலி பகுதியில் நடைபயிற்சி செய்யும்போது அணிலால் தாக்கப்பட்டு, கடுமையான காயங்களுக்காக மருத்துவ உதவி பெற்றார். இசபெல் கம்பாய் என்ற பெண்ணும், நடைபயிற்சியின்போது அணிலால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.