பாகிஸ்தானில் ஆன்லைன் PUBG விளையாட்டில் ஏற்பட்ட மனஅழுத்தத்தால், தனது குடும்பத்தினரை கொன்ற 17 வயதுச் சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லாகூரின் கஹ்னா பகுதியில் வசித்து வந்த ஜைன் அலி என்ற சிறுவன், கடந்த 2022ஆம் ஆண்டு தனது 14வது வயதில், தாயார் நாகித் முபாரக் (45), அண்ணன் தைமூர் (20), மற்றும் இரு சகோதரிகள் மஹ்னூர் (15), ஜன்னத் (10) ஆகியோரைக் கொலை செய்தான். இந்த கொடூர சம்பவம், பாகிஸ்தான் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
PUBG விளையாட்டின் மீது அதிகளவு பழக்கம் கொண்டிருந்த ஜைன் அலி, தினமும் பல மணி நேரங்கள் அதில் மூழ்கியிருப்பது வழக்கமாக இருந்தது. இதனைப் பற்றி அவரது தாயார் கண்டித்துவந்த நிலையில், ஒரு நாள் விளையாட்டில் இலக்கைத் தவறவிட்ட காரணத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில், தூங்கிக் கொண்டிருந்த தாயார் மற்றும் மூன்று சகோதரர்களை வீட்டில் இருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில், PUBG விளையாட்டின் தாக்கமே காரணம் என போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த லாகூர் நீதிமன்றம், குற்றவாளி ஜைன் அலியின் வயது சிறுவனாக இருப்பதை கருத்தில் கொண்டு, மரண தண்டனைக்குப் பதிலாக நான்கு ஆயுள் தண்டனைகள் வழங்கியது. ஒவ்வொரு கொலைக்கும் 25 ஆண்டுகள் என மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த சம்பவம், ஆன்லைன் விளையாட்டுகள் சிறுவர்களின் மனநிலையை எப்படி பாதிக்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. பெற்றோர் மற்றும் கல்வி அமைப்புகள், பிள்ளைகள் எந்த அளவிற்கு டிஜிட்டல் உலகத்தில் ஈடுபடுகின்றனர் என்பதை கவனமாக கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
