சமூக வலைதளங்களில் புகழ்பெற்றாக வேண்டும் என்ற நோக்கில், உயிருக்கு ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், ஓடும் பேருந்துக்கு முன்பாக ‘ஸ்டண்ட்’ செய்ய முயன்ற இளைஞர் ஒருவர், பேருந்து மோதி படுகாயமடைந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், மூன்று இளைஞர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்து சாலையோரம் நிற்கின்றனர். அவர்களில் இருவர் திடீரென சாலையின் மறுபுறம் ஓடி, வேகமாக வரும் ஒரு பேருந்தை வழிமறித்து சாகசம் செய்ய முயல்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக, ஓட்டுநரால் பேருந்தை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

வேகமாக வந்த பேருந்து, சாகசம் செய்ய முயன்ற இளைஞர் மீது பலமாக மோதியது. இதில் அந்த இளைஞர் காற்றில் தூக்கி வீசப்பட்டு, சாலையின் மறுபுறம் விழுந்தார். பலத்த காயமடைந்த அவருக்குத் தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதைக் கண்டு, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக உதவிக்கு ஓடி வந்தனர். காயமடைந்த இளைஞரின் தற்போதைய நிலை குறித்து இன்னும் விரிவான தகவல்கள் வெளிவரவில்லை.

வெறும் ‘லைக்ஸ்’ மற்றும் ‘வியூஸ்’ பெறுவதற்காகத் தங்கள் உயிரையே பணயம் வைக்கும் இத்தகைய போக்கிற்கு இணையதளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “புகழ் பெற வேண்டும் என்பதற்காகத் தற்கொலைக்குச் சமமான இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.