வறுமையின் பிடியில் சிக்கினாலும், தன் மகனின் முன்னேற்றத்திற்காக ஒரு தந்தை மேற்கொள்ளும் நூதன முயற்சி, சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வசதியில்லாத நிலையில், இயற்கை மருத்துவத்தை நம்பி அந்தத் தந்தை எடுக்கும் முயற்சி குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், தந்தை ஒருவர் கடற்கரை மணலில் சுமார் இரண்டு அடி ஆழத்திற்கு குழி தோண்டுகிறார். பின்னர், அருகில் படுத்திருக்கும் தனது மாற்றுத்திறனாளி மகனை மெதுவாகத் தூக்கி, அந்த மணல் குழிக்குள் நிற்க வைக்கிறார். சிறுவன் கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக, அவனது இடுப்பு வரை மணலை நிரப்பி அணைப்பு கொடுக்கிறார்.
एक पिता अपने छोटे बेटे की थेरेपी का खर्च नहीं उठा सकता, इसलिए वह उसे समुद्र किनारे ले जाकर खुद ही मदद करता है।
वह बच्चे के पैरों को रेत में खड़ा करके दबा देता है, ताकि उसके पैर मजबूत हों और वह चलना सीख सके। 🥺 pic.twitter.com/pEjqpBCf8X— Rehan_Idrisi (@MR_COOL77777) March 24, 2026
இந்த வீடியோவை பகிர்ந்தவர்கள், அந்தத் தந்தை தனது மகனுக்குத் தேவையான விலையுயர்ந்த பிசியோதெரபி (Physiotherapy) போன்ற மருத்துவ சிகிச்சைகளை அளிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், அதனால் மகனின் கால்கள் வலுப்பெற்று அவன் நடக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மணலில் நீண்ட நேரம் நிற்க வைப்பதன் மூலம் கால்களில் பலம் கிடைக்கும் என்பது அந்தத் தந்தையின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த வீடியோ ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியான 24 மணி நேரத்திற்குள் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது. “ஒரு தந்தையின் பாசத்திற்கு முன்னால் வறுமை தோற்றுப் போகிறது”, “யாராவது இவருக்கு மருத்துவ உதவி செய்ய முன்வர வேண்டும்” எனப் பலரும் உருக்கமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
