முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவையும் பொதுச் செயலாளர் பழனிச்சாமியையும் குறை சொல்லவில்லை, அதற்கு எதற்கு விளக்கம் கூற வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு, கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் படம் இல்லாதது தொடர்பாக அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அத்திக்கடவு அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகளிடம் தான் முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.
அவர் அதிமுகவையும் பொதுச் செயலாளர் பழனிச்சாமியையும் குறை சொல்லவே இல்லை. அந்த நிகழ்ச்சியை நடத்தியது அதிமுக கிடையாது. விவசாயிகள் சங்கம் சார்பில் தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதனால் செங்கோட்டையன் கருத்தால் அதிமுகவில் எந்த சலசலப்பு ஏற்படவில்லை. இதனை பெரிதாக எடுத்துக்கொண்டு திமுகவின் கைக்கூலியாக இருக்கக்கூடியவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் இந்த இயக்கத்திற்கு சிறு ஊறு விளைவிக்கலாம் என்று நினைக்கின்றனர்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போல பழனிச்சாமி அதிமுகவை வலுவாக கொண்டு செல்கின்றார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அதிமுகவையும் பழனிச்சாமியையும் சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக எங்களுக்குள் ஏதாவது செய்ய பார்க்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமியின் நற்பெயருக்கு எப்படியாவது களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டு அதிமுகவிற்கு எதிராக எதையாவது தூண்டிவிடப் பார்க்கின்றனர். இப்படி இருக்கையில் நான் இந்த விவகாரத்திற்கு எதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
