சமூக வலைதளங்களில் ‘வித்தியாசமான உணவு’ என்ற பெயரில் சாக்லேட் சமோசா, மேகி மில்க் ஷேக் எனப் பல வினோதங்கள் அரங்கேறி வரும் நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தெருவோர வியாபாரி செய்த ‘முட்டை புர்ஜி’ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக முட்டை புர்ஜி செய்ய எண்ணெய் அல்லது வெண்ணெய் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த வியாபாரி கடாயில் குளிர்பானத்தை (Cold Drink) ஊற்றி, அதை கொதிக்க வைத்து, அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி மசாலா கலந்து இந்த வினோத உணவைத் தயாரிக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த ‘குளிர்பான முட்டை புர்ஜி’ ஒரு பிளேட் 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “வியூஸுக்காகவும் லைக்குகளுக்காகவும் இப்படி என்ன வேண்டுமானாலும் செய்வார்களா?” எனத் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டி வருகின்றனர். “யாரெல்லாம் கிட்னி பலமாக இருக்கிறதோ அவர்கள் மட்டும் இதைச் சாப்பிடவும்” எனப் பலரும் கிண்டலாகவும் கோபமாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
