ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில், காலி இடத்தில் தொழுகை நடத்திய ஷாஹித் என்ற முதியவர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்ரியா கோவில் எதிரே உள்ள காலி இடத்தில் அவர் தொழுகை நடத்தியபோது, அங்கு வந்த சிலர் அவரைத் தடியால் தாக்கியதோடு, வலுக்கட்டாயமாகச் சில மத முழக்கங்களை எழுப்பும்படி வற்புறுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, சிறுபான்மையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

​தாக்கப்பட்ட ஷாஹித், தான் கோவில் வளாகத்திற்கு வெகு தொலைவில் உள்ள காலி இடத்தில்தான் தொழுகை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, கோவில் மேலாளர் அரவிந்த் சர்மா மற்றும் சிலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் வந்தவர் என்பது கூடுதல் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.