அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி துறையில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல், தற்போது இந்தியாவின் பீர் உற்பத்தித் துறையையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதன் விளைவாக, வரும் கோடைக் காலத்தில் பீர் விலை கணிசமாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இதில் பாதிக்கும் மேற்பட்டவை ஈரானுடனான மோதல் நடைபெறும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ வழியாகவே வருகின்றன. குறிப்பாக, கத்தார் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எல்.பி.ஜி (LPG) எரிவாயு விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கண்ணாடி பாட்டில்களை தயாரிக்கும் உலைகளை (Furnaces) இயக்க எரிவாயு அத்தியாவசியமாகும். தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால், கண்ணாடி பாட்டில்களின் விலை சுமார் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக இந்திய மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம் (Brewers Association of India) தெரிவித்துள்ளது. சில பாட்டில் தயாரிப்பு ஆலைகள் தங்கள் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தி வைத்துள்ளன.
போர் காரணமாக சரக்கு போக்குவரத்து (Logistics) பாதிக்கப்பட்டுள்ளதால், அலுமினியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தவிர பீர் கேன்களுக்கான அலுமினியம் தட்டுப்பாடு, அட்டைப் பெட்டிகள் (Paper Cartons), லேபிள்கள் மற்றும் டேப் ஆகியவற்றின் விலை உயர்வு. தயாரிப்பு செலவு அதிகரிப்பதால் சில நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடர முடியாத சூழல் நிலவுகிறது.
இந்தியாவில் கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில், பீருக்கான தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்தச் சூழலில் உற்பத்தியாளர்கள் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தைச் சரிகட்ட விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து இந்திய மதுபான உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இயக்குநர் வினோத் கிரி கூறுகையில், “உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், பீர் விலையை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த அனுமதிக்குமாறு மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மதுபானச் சந்தை 2024-ல் சுமார் ₹73,800 கோடி மதிப்பைக் கொண்டிருந்தது. இது 2030-க்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போதைய சர்வதேசப் போர் பதற்றம் இந்தத் துறையில் தற்காலிகத் தேக்கத்தையும், நுகர்வோர் மத்தியில் கூடுதல் விலையையும் சுமத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்தத்திற்கான ஆலோசனைகளை வழங்கினாலும், போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்த தெளிவற்ற நிலையேநீடிக்கிறது.
