ஐதராபாத் ஜவஹர் நகர் பகுதியில் கடந்த 10 மாதங்களாக மறைக்கப்பட்டிருந்த ஒரு கொடூர கொலைச் சம்பவம், ஒரு சாதாரண போக்குவரத்து விதிமீறல் அபராதச் சீட்டு (E-Challan) மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது காதலுக்கு இடையூறாக இருந்த தாயைக் கொன்று வீட்டு வளையத்திற்குள்ளேயே புதைத்த மகளையும், அவரது காதலனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அதாவது ஐதராபாத் பாரத் நகரைச் சேர்ந்த அஞ்சு (40) என்ற பெண்மணி, தனது கணவர் பிரிந்து சென்ற நிலையில், இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். வீடுகளில் வேலை செய்து குடும்பத்தைக் கவனித்து வந்த அஞ்சுவின் இளைய மகளுக்கும், மாண்டி குமார் (22) என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
மகளின் காதலுக்கு அஞ்சு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாண்டி குமார் மீது அஞ்சு அளித்த புகாரின் பேரில், அவர் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு முறை சிறைக்குச் சென்றுள்ளார். இதனால் அஞ்சு மீது அந்த ஜோடி கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளது.
கடந்த 2025 மே மாதம் 12-ம் தேதி, ஆத்திரத்தில் இருந்த மகளும் காதலன் மாண்டியும் இணைந்து அஞ்சுவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் வராத வகையில், உடலை வீட்டின் வளாகத்திலேயே குழி தோண்டிப் புதைத்துள்ளனர். அதன் பிறகு, எதுவும் நடக்காதது போல தங்களது அன்றாடப் பணிகளைத் தொடர்ந்துள்ளனர்.
அஞ்சுவை நீண்ட நாட்களாகக் காணவில்லை என்பதால், அவரது மூத்த மகள் கடந்த 2025 அக்டோபர் மாதம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில், சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு சமீபத்தில் அஞ்சுவின் பெயரில் இருந்த ஸ்கூட்டர் ஒன்றுக்கு போக்குவரத்து விதிமீறலுக்கான ஆன்லைன் அபராதச் சீட்டு (e-challan) வந்துள்ளது. மாயமான ஒருவரின் வாகனம் எப்படி பயன்பாட்டில் உள்ளது என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது.
அந்த வாகனத்தை ஆய்வு செய்தபோது, ஜீடிமெட்லாவைச் சேர்ந்த ஒருவர் அந்த ஸ்கூட்டரைப் பயன்படுத்தி வருவது தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது, மாண்டி குமாரிடம் இருந்து அந்த வாகனத்தை வாங்கியதாகக் கூறினார். உடனே மாண்டி குமாரைப் பிடித்து போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தனது காதலியுடன் சேர்ந்து அஞ்சுவைக் கொலை செய்து புதைத்த உண்மையை மாண்டி ஒப்புக்கொண்டார். 10 மாதங்களாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த கொலை வழக்கு, ஒரு சின்ன டிராஃபிக் அபராதத்தால் முடிவுக்கு வந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
