தமிழகத்தில் ஆதி திராவிடர் நலத் துறை மாணவர் விடுதிகள் முறையாகச் செயல்படவில்லை என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளப் பதிவு மூலம் குற்றம் சாட்டியுள்ளார். முன்பு செயல்பாட்டில் இருந்த 1,331 விடுதிகளில், தற்போது 100-க்கும் அதிகமான விடுதிகள் மூடப்பட்டு, வெறும் 1,200 விடுதிகளே இயங்குவதாகவும், இதனால் சுமார் 98,000 மாணவர்கள் பயன்பெறும் இடத்தில் இப்போது 65,000 மாணவர்கள் மட்டுமே தங்கிப் படித்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

​இந்த விடுதிகளில் அடிப்படை வசதிகளான சுத்தமான அறைகள், சுகாதாரமான குடிநீர், மற்றும் தரமான உணவு ஆகியவை இல்லை என்பதே மாணவர்கள் சேர விருப்பம் காட்டாதற்குக் காரணம் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் உண்ணும் உணவு தரமற்றதாக இருப்பதால் அது வீணாகி, கால்நடைகளுக்கு விற்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, திமுக அரசு சரியாகச் செலவிடாமல் திருப்பி அனுப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். “சமூக நீதி விடுதி என்று பெயர் மாற்றம் செய்தோம் என விளம்பர நாடகம் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதட்டளவில் பேசுவதைக் காட்டிலும், இந்த மாணவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்ட வேண்டும்” என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.