நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் சுற்று ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இந்திய பேட்ஸ்மேன்கள் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தனர்.

 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள திணறியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இது பற்றி கேப்டன் சூரியகுமார் கூறுகையில், கடந்த போட்டிகளில் என்ன நடந்தது என்பதைப் பற்றி நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை. எங்கள் வீடியோ ஆய்வாளர், இந்த ஆண்டில் பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு சிறப்புத் தொகுப்பை தயாரித்திருந்தார். அதைப் பார்த்தது எங்களுக்குப் பெரும் உதவியாகவும், கற்றலாகவும் இருந்தது. பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டனர். அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் எங்களது அதிரடி ஆட்டம் தொடரும் என்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிப் பந்தயத்தில் உறுதியாக நீடிக்கிறது. வரும் மார்ச் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில், இந்தியா அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.