2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் நான்கு முனைப் போட்டியாக உருவெடுத்துள்ள சூழலில், சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது திமுக மற்றும் பாஜக மேடைகளில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நேற்று சென்னை விமான நிலையத்தில் அரங்கேறிய ஒரு நிகழ்வு அரசியலுக்கு அப்பாற்பட்ட பண்பாட்டைப் பறைசாற்றியது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சி செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்தார். அதே நேரத்தில், முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினும் அதே விமானத்தில் பயணிப்பதற்காக அங்கு வந்திருந்தார்.

தனது நிர்வாகிகளுடன் சென்றுகொண்டிருந்த நயினார் நாகேந்திரன், தனக்குப் பின்னால் துர்கா ஸ்டாலின் வருவதைக் கண்டதும் சட்டென்று நின்றார். உடனே அவர் அருகே சென்று மிகுந்த மரியாதையுடன் வணக்கம் தெரிவித்தார். இதற்குப் பதிலுக்கு வணக்கம் தெரிவித்த துர்கா ஸ்டாலின், புன்னகையுடன் நயினார் நாகேந்திரனின் நலன் குறித்து விசாரித்தார்.

கட்சிகளுக்கு இடையே கடுமையான அரசியல் போர் நடந்து வரும் வேளையிலும், பொதுவெளியில் தர்மசங்கடத்திற்கு இடம் கொடுக்காமல், ஒருவருக்கொருவர் மலர்ந்த முகத்துடன் நலம் விசாரித்துக்கொண்ட விதம் அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது.