பொதுமேடைகளில் பெண்களைத் தரக்குறைவாகச் சித்தரித்துப் பேசி வரும் திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் போக்குக் கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு பேசினார். அவரது உரையில் பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகள் இடம்பெற்றதுடன், குறிப்பாக நடிகை திரிஷாவை மிகத் தரக்குறைவாக விமர்சனம் செய்திருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வானதி சீனிவாசன் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “பெண்களை இழிவாகப் பேசுவதில் திமுக நிர்வாகிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அப்படி என்னதான் திருப்தி கிடைக்கிறது என்பது புரியவில்லை. அரசியல் விமர்சனம் என்ற பெயரில் தனிப்பட்ட நபர்களையும், பெண்களையும் இழிவுபடுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது அரசியல் கண்ணியத்திற்கும், சமூக ஒழுக்கத்திற்கும் எதிரானது.”
மேடை நாகரிகம் என்னவென்ற தெரியாத திமுக பேச்சாளர்கள்..!
பெண்களைக் கேவலமாகப் பேசுவது என்றால் தீய சக்தி திமுக நிர்வாகிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அப்படி என்ன ஆனந்தம் தெரியவில்லை. கோவையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக… pic.twitter.com/Ha4RjvrR6c
— Vanathi Srinivasan (@VanathiBJP) January 27, 2026
மேலும், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் தொடர் செயல்பாடுகள் குறித்து அவர் சாடியபோது: “மாற்றுக் கட்சிகளை அரசியல் ரீதியாக விமர்சிக்கத் திராணியில்லாமல், இவ்வாறு தரக்குறைவாகப் பேசுவதன் மூலம் திமுக நிர்வாகிகள் தங்கள் தரத்தைத் தாங்களே குறைத்துக் கொள்கின்றனர். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை இப்படிப் பேசச் சொல்லி யார் உத்தரவிட்டார்கள்?
பெண்கள் குறித்து மேடைகளில் உயர்வாகப் பேசிக்கொண்டு, மறுபுறம் இத்தகைய இழிவான பேச்சுகளை அனுமதிப்பது திமுகவின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. சில நாட்கள் மட்டும் அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, பின்னர் மீண்டும் சேர்த்துக் கொண்டு அதேபோல் பேச அனுமதிப்பதே ‘விடியா’ அரசின் வாடிக்கையாகிவிட்டது.”
மேலும் இத்தகைய அவதூறு பேச்சுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டும் காணாமல் இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்த வானதி சீனிவாசன், பெண்களை அவமதிக்கும் கலாச்சாரத்திற்குத் திமுக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
