வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான வன்முறை எல்லை மீறிக்கொண்டிருக்கிறது. காஜிப்பூர் மாவட்டத்தில் ‘வைசாகி ஸ்வீட்மீட் அண்ட் ஹோட்டல்’ நடத்தி வந்த லிட்டன் சந்திர கோஷ் என்ற அப்பாவி வியாபாரி, கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது ஹோட்டலில் பணிபுரியும் தொழிலாளியைத் தாக்க வந்த கும்பலைத் தடுத்ததற்காக, லிட்டன் சந்திர கோஷின் தலையில் மண்வெட்டியால் தாக்கி உயிரைப் பறித்துள்ளனர். ஒரே நாளில் ரிப்பன் சாஹா மற்றும் லிட்டன் சந்திர கோஷ் என இரண்டு இந்துக்கள் கொல்லப்பட்டிருப்பது, அங்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழலை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகிறது.
அந்தக் குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்த லிட்டன் மறைந்துவிட, அவரது சடலத்தின் முன்னே கதறி அழும் சின்னஞ்சிறு மகனும், மனைவியும் இருக்கும் புகைப்படம் பார்ப்பவர் எவர் மனதையும் கலங்கச் செய்கிறது. ஒரு ஹோட்டல் வியாபாரியைக் கூட விட்டுவைக்காத இந்த மதவெறி, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே சூனியமாக்கியுள்ளது. இந்தக் கொடூரக் கொலைகளுக்குப் பின்னால் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அங்குள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் சர்வதேச அளவில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. மனிதநேயம் மரணித்துக் கொண்டிருக்கும் இந்தச் சம்பவங்கள் இனியாவது தடுத்து நிறுத்தப்படுமா?
