இந்தோனேசியாவின் யோக்யகர்த்தா நகரில் இருந்து தெற்கு சுலவேசி மாகாணத்தின் மக்காசர் நகருக்கு 11 பேருடன் இன்று (ஜன. 17) மதியம் புறப்பட்டுச் சென்ற ஏடிஆர் 42-500 (ATR 42-500) ரக விமானம், மாரோஸ் மாவட்ட வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது தரைக்கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இந்தோனேசியா ஏர் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானத்தில் 8 ஊழியர்களும், கடல்சார் மற்றும் மீன்வளத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேர் பயணித்தனர். மதியம் 1.17 மணியளவில் விமானத்தின் சிக்னல் துண்டிக்கப்பட்ட நிலையில், விமானம் மாயமான லியாங்-லியாங் மலைப்பகுதியில் பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், தீப்பற்றி எரிவதைக் கண்டதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
புலுசருங் மலைப்பகுதியில் சிதறிக் கிடக்கும் விமான பாகங்களை மலையேற்ற வீரர்கள் கண்டறிந்துள்ள நிலையில், மோசமான வானிலை மற்றும் கடினமான நிலப்பரப்பு காரணமாக மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமை (Basarnas) ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் உதவியுடன் அப்பகுதியில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
