வெனிசுலா மீது நடத்தப்பட்ட திடீர் ராணுவத் தாக்குதலில் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்த அமெரிக்கா, அவர்களை ரகசியமாக நியூயார்க்கிற்கு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும். அங்கு அமெரிக்காவிற்கு சாதகமான ஜனநாயக அரசு அமையும் வரை எங்களது ராணுவம் அங்கேயே தங்கியிருக்கும். போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் மதுரோ மீது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு கடுமையான தண்டனை உறுதி” என அதிரடியாக அறிவித்தார். மேலும், அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டால் கொலம்பியா மற்றும் மெக்சிகோ நாடுகள் மீதும் ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இடைக்கால அதிபர் பொறுப்பேற்பு:
இதற்கிடையே, வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவின்படி துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். அமெரிக்காவின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், வெனிசுலாவின் இயற்கை வளங்களை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், பதற்றத்தைத் தணிக்க அமெரிக்காவுடன் இணைந்து வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே கண்ணியமான உறவை ஏற்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் சமரசக் குரல் எழுப்பியுள்ளார்.
