பக்தி என்பது பிற உயிர்கள் மீது காட்டும் கருணையில் தான் இருக்கிறது என்பதை மறந்த ஒருவரின் செயல் இப்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோவில், கங்கை நதிக்கரையில் ஒரு பக்தர் வழிபாட்டிற்காக பல லிட்டர் பாலை ஆற்றில் ஊற்றிக் கொண்டிருக்கிறார்.

அப்போது, அங்கு வந்த சில ஏழைச் சிறுமிகள் தங்களது காலி பாத்திரங்களைக் காட்டி, தங்களுக்குக் கொஞ்சம் பால் தருமாறு அந்த நபரிடம் கையேந்தி கேட்கின்றனர்.

ஆனால், அந்த நபர் சிறுமிகளின் பசியையோ, அவர்களது பரிதாப நிலையையோ துளியும் கவனிக்காமல், தொடர்ந்து பாலை ஆற்றில் ஊற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்.

இந்தக் காட்சியைப் பார்த்த இணையவாசிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். “கல்லுக்கும் ஆற்றுக்கும் பாலை ஊற்றுவதை விட, பசியால் வாடும் குழந்தைகளுக்குக் கொடுத்தால் அதுவே உண்மையான புண்ணியம்; மனிதநேயம் இல்லாத பக்தி எதற்கும் உதவாது” எனப் பலரும் தங்களது ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர்.