மைசூருவில் உள்ள குவெம்புநகர் பகுதியைச் சேர்ந்த நித்யானந்தா என்ற 50 வயது நபர், மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி அவரது மனைவி சுசீலா குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால், கணவரின் உடலில் கழுத்தைச் சுற்றி காயங்கள் இருப்பதைக் கண்ட நித்யானந்தாவின் சகோதரர், இது குறித்து போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில், மது போதையில் தூங்கிக்கொண்டிருந்த கணவரை சுசீலா கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நித்யானந்தா மற்றும் சுசீலா தம்பதியினரிடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு, பணப் பிரச்சினை மற்றும் சொத்து தொடர்பான கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மாரடைப்பு என்று நாடகமாடி கொலையை மறைக்க முயன்ற சுசீலாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.