மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு  பகுதியில், பருவமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை இணைப்பு மற்றும் பாலம் இல்லாததால் அவசர கால ஆம்புலன்ஸ் சேவை உள்ளே வர முடியாத கொடூரமான நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை மாலை சங்கர் விஸ்வகர்மாவின் 35 வயது கர்ப்பிணி மனைவி சவிதா விஸ்வகர்மாவுக்குப் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடர்பு கொண்டுள்ளனர், ஆனால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வாகனம் வர முடியாததால், வேறு வழியின்றி உறவினர்களும் கிராமவாசிகளும் சேர்ந்து சவிதாவை ஒரு கட்டிலில் படுக்க வைத்து ஆற்று வெள்ளத்தை ஆபத்தான முறையில் கடக்க முயன்றுள்ளனர்.

இந்த இக்கட்டான பயணத்தின் போது ஆற்றுக்கு நடுவே பெண்ணுக்குப் பிரசவ வலி தீவிரமடைந்து கட்டிலிலேயே குழந்தை பிறந்துள்ள நிலையில், ஆற்றைக் கடந்த பிறகும் ஆம்புலன்ஸ் வராததால் தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை மோட்டார் சைக்கிளில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.

“>

தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், பாலம் மற்றும் அனைத்துக் காலநிலைகளுக்கும் ஏற்ற சாலை வசதி கேட்டு பஞ்சாயத்து மற்றும் எஸ்டிஎம்  அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நிரந்தர தீர்வும் காணப்படாததே பொதுமக்கள் இந்த அவல நிலையைச் சந்திக்கக் காரணம் எனப் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.