உத்தரபிரதேசம், ரேபரேலி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் செங்கற்களை தூக்கிச் சென்று பள்ளி வளாகத்தில் நடைபெறும் இன்டர்லாக் பாதை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அமவான் தொகுதியில் உள்ள சாண்டி நாகின் தொடக்கப்பள்ளியில் இடம்பெற்ற இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் பரவி கடும் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

ராஹுல் சைனி என்ற சமூக வலைதள பயனர் பதிவேற்றிய காணொளியில், பள்ளி சீருடை அணிந்த குழந்தைகள் செங்கற்களை சுமந்து செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் பலரும் சோர்வடைந்த நிலையில் இருந்தும் கட்டாயப்படுத்தப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என கூறப்படுகிறது. காணொளியில், பள்ளித் தலைமையாசிரியை பிரதிபா சிங், வீடியோ எடுப்பதைத் தடுக்க முயன்றதும், பின்னர் அதை நீக்குமாறு கேட்டுக்கொண்டதும் தென்படுகின்றது.

 

இச்சம்பவம் சிறார் சுரண்டல் மற்றும் குழந்தை உரிமைகள் மீறல் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சட்டப்படி, பள்ளி மாணவர்களை உடல் உழைப்பில் ஈடுபடுத்துவது குற்றமாகும். இந்நிலையில் ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் இதுபோன்ற செயல்கள் நடந்தது கல்வித்துறையையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சம்பவம் பரவலான கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பயனர், “பள்ளியில் சுத்தம் செய்வது போன்ற செயலில் மாணவர்கள் ஈடுபடுவது தவறில்லை. ஆனால் இப்படிப் பட்ட கனரக வேலை குழந்தைகளுக்கு பொருத்தமல்ல” என்றார்.
மற்றொரு பயனர், “அத்தகைய ஆசிரியர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். மேலும் இச்சம்பவம் வைரலாகி வரும் நிலையில், பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலை எழுந்துள்ளது.