இன்டிகோ விமான நிறுவனத்தின் தொடர்ச்சியான விமானச் சேவை ரத்து நடவடிக்கைகளால் நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மும்பை விமான நிலையத்தில் ஆப்பிரிக்கப் பெண் ஒருவர் விமான நிறுவனத்தின் கவுண்டர் மீது ஏறி ஊழியர்களிடம் ஆவேசமாகக் கத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று மட்டும் 400க்கும் அதிகமான இன்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
இந்த அசாதாரண சூழ்நிலையில், ஆப்பிரிக்கப் பெண்மணி தனது விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், இன்டிகோ ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். சரியான பதில் கிடைக்காததால், ஆத்திரமடைந்து கவுண்டர் மீது ஏறி நின்று உரத்த குரலில் கத்தியுள்ளார். அவர் தனது பன்னாட்டு இணைப்பு விமானத்தை இழந்திருக்கலாம் என்றும், அதனால் பிரான்சுக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியதாக இன்ஸ்டாகிராம் பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
இந்தச் சம்பவம் இன்டிகோ நிறுவனம் சமீபத்தில் அமல்படுத்திய கடுமையான ஊழியர் அட்டவணை விதிகளுக்கு ஏற்பச் செயல்படத் திணறுவதால் ஏற்பட்டுள்ள செயல்பாட்டுச் சிக்கல்களுக்கு மத்தியில் நடந்துள்ளது. இன்டிகோ நிறுவனம், அடுத்த 48 மணி நேரத்திற்குள் படிப்படியாகச் சேவைகளைச் சீராக்கி, தாமதமின்றி இயங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
