தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட்டையில், 28 வயது இளைஞர் மோகுலய்யா, இருசக்கர வாகனத்தில் சென்றபோது டிப்பர் லாரியுடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து நடைபெற்ற இடம் நெரிசலான ஒருவழிச் சாலையாக இருந்ததால், போலீசார் பலமுறை அழைப்பு விடுத்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால், அங்கிருந்த மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

அந்தநேரத்தில், பொதுமக்கள் கூடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், போலீசார் வேறு வழியின்றி காய்கறி வியாபாரிகள் பயன்படுத்தும் தள்ளுவண்டியை ஏற்பாடு செய்து, அதில் உடலை ஏற்றிச் சென்றனர். அந்த உடல் பாதி வண்டிக்குப் புறம் தொங்கிய நிலையில் நகர்த்தப்பட்ட காட்சி, அங்கிருந்தவர்களின் மனதை அதிர்ச்சியடையச் செய்ததோடு, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

“>

உடலை அப்படிச் சுமந்த போலீசாரின் நடவடிக்கை பொதுமக்களிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. “அவசரநிலைகளைக் கையாள அரசு எவ்வளவு தயார் நிலையில் இல்லை என்பதை இந்த சம்பவமே நிரூபிக்கிறது” என்று குடியிருப்பவர்கள் சாடினர்.

ஆனால், நெரிசலான சாலையும், ஆம்புலன்ஸ் வராத சூழ்நிலையும் காரணமாக, குழப்பத்தைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று நாராயண்பேட்டை காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்தார். தற்போது, சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.