பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வீரர்களையும், ரசிகர்களையும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாக மைதான நிர்வாகம் மீது பிசிசிஐ-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது CSK VS RCB நடைபெற்ற போட்டியின் போது, மைதானத்தில் இருந்த டிஜே (DJ), சென்னை அணியினரைக் கிண்டல் செய்யும் விதமாகப் பாடல்களை ஒளிபரப்பியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஆர்சிபி அணியின் வீரர் ஜித்தேஷ் சர்மா சென்னை கலாச்சாரத்தை எள்ளிநகையாடும் வகையில் பாடிய ‘இட்லி, தோசை, சட்னி, சாம்பார்’ என்ற பாடலைத் திரையரங்க டிஜே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியதாகப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாவது, விளையாட்டு உணர்வுக்கு மாறாக, ஒரு குறிப்பிட்ட அணியின் வீரர்களையும் ரசிகர்களையும் இழிவுபடுத்தும் நோக்கில் இத்தகைய பாடல்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இது கண்டிக்கத்தக்கது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) அதிகாரப்பூர்வமாக முறையிட்டுள்ளோம் என்றனர்.
மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்கள், தங்களை நோக்கி இத்தகைய கிண்டல் பாடல்கள் ஒலிக்கப்பட்டதால் மிகுந்த மனவேதனை அடைந்ததாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மைதானத்தில் நிலவ வேண்டிய ஆரோக்கியமான போட்டிச் சூழலை இது போன்ற செயல்கள் பாதிப்பதாக விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
