துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. இதுவரையில் இரு நாடுகளிலும் பலியானோர் எண்ணிக்கை இதுவரை 35000 கடந்துள்ளது. மேலும் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

இந்த நிலையில் நிலநடுக்கத்திலிருந்து உயிருடன் தப்பியவர்கள் வீடுகளை இழந்ததால் சாலைகளில் தங்கி இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு கடும் குளிர் நிலவி வருவதால் அதனை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இதனால் சிரியா நாட்டில் மீட்கப்பட்டவர்களுக்காக காலியான இடத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவை தற்காலிக தங்குமிடங்களாக இயங்கப்பட்டு வருகின்றது.

அது மட்டுமில்லாமல் கத்தார் நாடு உலக கால்பந்து போட்டியில் விருந்தினர்களுக்காக வைத்திருந்த சொகுசு கேரவன்களை துருக்கிக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. இதன் முதல் பகுதியாக 350 கேரவன்கள் துருக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 10000 மொபைல் வீடுகளை வழங்குவதாகவும் கத்தார் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.