மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஏற்பட்ட கனமழை ஒரு குடும்பத்திற்கு பெரும் பேரிழவாக மாறியது. புதன்கிழமை இரவு பெய்த கனமழையின் போது, 8 வயது சிறுவன் ஒருவன் திடீரென வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம், இந்தூர் மாநகரில் உள்ள ஓமாக்ஸ் நகர் அருகேயுள்ள மாயகேடி பகுதியில் நடைபெற்றது. உயிரிழந்த சிறுவன் ராஜ்வீர் மால்வியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பாதுகாப்பு காவலராக பணிபுரியும் ராஜ்பால் மால்வியாவின் மகன். ராஜ்வீர், தனது பெற்றோருக்கு ஒரே மகனாவார்.
புதன்கிழமை மாலை தொடங்கி இரவு வரை இந்தூரில் இடைவிடாமல் கனமழை பெய்தது. மழைநேரத்தில் ராஜ்வீர் தனது தந்தையுடன் வெளியே சென்றிருந்தார். வாகனத்தை நிறுத்தும் போது ராஜ்பால், தனது மகனை அருகிலுள்ள நடைமேடையில் காத்திருக்கச் சொல்வதோடு, சிறிது தூரம் விலகிச் சென்றார். சுமார் 10 நிமிடங்களில் திரும்பி வந்தபோது, ராஜ்வீரை காணவில்லை.
உடனடியாக காவல்துறைக்கு தகவலளிக்கப்பட்டது. லசுடியா காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்தன. இருப்பினும், கனமழை மற்றும் வலுவான நீரோட்டம் காரணமாக, அதே இரவு தேடுதல் பணியை தொடங்க முடியவில்லை.
வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மீட்பு நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. நீரின் அழுத்தம் குறைந்த பின்னர், குழுவினர் கயிறுகளின் உதவியுடன் தேடுதல் பணியை மேற்கொண்டனர். காலை 9 மணியளவில், ராஜ்வீரின் உடல், ஒரு பாலத்தின் கீழ் சிக்கிய நிலையில், சம்பவ இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, “சிறுவன் வழுக்கி வடிகாலில் விழுந்திருக்கலாம்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ராஜ்வீரின் உடலை மீட்க SDRF குழுவினர் நான்கு மணி நேரம் போராடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சம்பவம் குறித்து உள்ளூர்வாசிகள் கடும் பதற்றத்தில் இருக்கின்றனர். வடிகால் அருகே எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாததைக் குற்றம்சாட்டி, நகராட்சி நிர்வாகத்தின் மீது ஆவேசம் வெளியிட்டுள்ளனர். “சிறுவர்களும் பொதுமக்களும் பயன்படுத்தும் பகுதிகளில், பாதுகாப்பு சுவர் அல்லது தடுப்பு வலை கூட இல்லாமல் இருப்பது அதிகாரிகளின் கவனக்குறைவைக் காட்டுகிறது” என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
