ஃபேஷன் மற்றும் அறிவியல் இணைந்து உருவாக்கியுள்ள ஒரு அதிசயம் உலகையே வியக்க வைத்துள்ளது. சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டி.ரெக்ஸ் டைனோசரின் கொலாஜன் புரதத்தை ஆய்வகத்தில் வளர்த்து, அதன் மூலம் ஒரு தனித்துவமான ஆடம்பரக் கைப்பை உருவாக்கப்பட்டுள்ளது.
‘என்ஃபின் லீவ்’ என்ற ஃபேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் பை, எந்த விலங்கையும் கொல்லாமல் அதே சமயம் உண்மையான விலங்குத் தோலைப் போன்ற உணர்வைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆம்ஸ்டர்டாம் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தப் பை, வரும் மே 11-ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.
இளநீலப் பச்சை நிறத்தில் ஜொலிக்கும் இந்தக் கைப்பையில் ஸ்டெர்லிங் வெள்ளி மற்றும் கருப்பு வைரங்கள் பதிக்கப்பட்டு மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை சுமார் 5 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 5 கோடி ரூபாய்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழங்கால உயிரியலும் நவீன தொழில்நுட்பமும் இணைந்த இந்தத் தயாரிப்பு, ஃபேஷன் உலகில் ஒரு புதிய புரட்சியாகக் கருதப்படுகிறது. விலங்குத் தோலுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மாற்று வழிகளைக் கண்டறியும் முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
