கர்நாடகாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றால் ரூ.6 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் ‘கர்நாடக ஒலிம்பிக் – 2025’ விருது வழங்கும் விழா, நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் சித்தராமையா, சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகளையும் பரிசுகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் உரையாற்றுகையில், “காங்கிரஸ் தலைமையிலான அரசு விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றால் ரூ.6 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.4 கோடியும், வெண்கலப் பதக்கம் வென்றால் ரூ.3 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இது விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாகும். கர்நாடக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.
மேலும், அரசு வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையில் 2 சதவீதமும், வனத்துறையில் 3 சதவீதமும் இடஒதுக்கீடு அமலில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் விளையாட்டுத் துறையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
