டெல்லியில் உள்ள பூங்கா ஒன்றில் உள்ளூர் குழந்தைகளுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வந்த ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், “ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையெனில் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும்” என பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ் தளத்தில் பரவி வரும் அந்த வீடியோவில், பயிற்சியாளரிடம் அவர், “நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை? நான் சொல்வதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள் இங்கே பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால், இந்தி பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறுவது பதிவாகியுள்ளது. மேலும், பூங்கா இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் ஏதேனும் குற்றச் சம்பவம் நடந்தால் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்ததாக அந்த வீடியோவில் காணப்படுகிறது.
BJP councillor Renu Chaudhary was seen threatening an African national, telling him to learn Hindi or leave Delhi, while he was relaxing in a park.
Someone should tell her how many Indians live in African countries without learning the local language. pic.twitter.com/1Y7j0U5gbb
— Manish RJ (@mrjethwani_) December 21, 2025
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ரேணு சவுத்ரிக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது. மொழி திணிப்பு மற்றும் வெளிநாட்டவர்களை அச்சுறுத்தும் வகையிலான பேச்சு என பலரும் விமர்சனம் முன்வைத்தனர். இதனிடையே, சர்ச்சை தொடர்பாக விளக்கம் அளித்த ரேணு சவுத்ரி, பூங்கா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக பலமுறை புகார்கள் வந்ததாகவும், அதனால்தான் ஆய்விற்காக பூங்காவிற்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் யாரையும் அச்சுறுத்தும் நோக்கம் தனக்கில்லை என்றும், தகவல் தொடர்பு எளிதாக இருக்க இந்தி மொழியை கற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
