புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராதி அருகே உள்ள வையாபுரிப்பட்டி கிராமத்தில் புதிய  தனியார் பெட்ரோல் நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, விழா நாளில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் தனித்துவமான சலுகை அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் 10:30 மணி வரையிலான நேரத்தில் 2 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் கூடுதலாக 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டது. மேலும், 5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 2.5 லிட்டருக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதுமானது என்ற சலுகையும் வழங்கப்பட்டது.

இந்த அறிவிப்பை அறிந்ததும் வாகன ஓட்டிகள் பலர் அதிக எண்ணிக்கையில் அந்த பெட்ரோல் நிலையத்திற்கு குவிந்தனர். இரு சக்கர வாகனங்கள், கார்கள், லாரிகள் என பல்வேறு வகை வாகனங்கள் நீண்ட வரிசையாக சுமார் ஒரு கிலோமீட்டருக்கு மேல் சாலையில் நின்று காட்சியளித்தன. சிறிது நேரத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையில் காத்திருக்கின்ற சூழ்நிலையையும் காண முடிந்தது. சிலர் காலை முதலே நேரத்துக்கு முன்பே வந்து காத்திருந்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக  உள்ள நிலையில், வாகன ஓட்டிகள் இந்த வகை சலுகையை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். “இது போன்ற சலுகைகள் அடிக்கடி இருந்தால் சுமை குறையும்” என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விழாவை முன்னிட்டு ஏற்பட்ட இந்த அதிரடி காட்சிகள், அந்தப் பகுதிக்கு சிறிய திருவிழா போல் ஒரு ஆனந்தபூர்வமான சூழலை உருவாக்கியது.