ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி, அவரது வாழ்க்கையின் இறுதிப் போட்டியாக அமையும்.

இது குறித்து கவாஜா அளித்துள்ள உருக்கமான பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த சில காலமாகவே ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வந்தேன். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே, இதுதான் எனது கடைசித் தொடராக இருக்கும் என்ற உள்ளுணர்வு எனக்குள் இருந்தது. இது தொடர்பாக அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டுடன் பேசினேன். 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியச் சுற்றுப்பயணம் வரை நான் விளையாட வேண்டும் என்று அவர் விரும்பினார்.

இருப்பினும், கிரிக்கெட்டிலிருந்து விடைபெற இதுவே சரியான தருணம் என்று நான் உணர்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான சிட்னி மைதானத்தில், எனது சொந்த விருப்பத்தின்படி விடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

தற்போது 39 வயதாகும் உஸ்மான் கவாஜா, கடந்த 2011-ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முதல் இஸ்லாமிய வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் இவர்.

இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கவாஜா, 43.39 சராசரியுடன் 6,206 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 16 சதங்களும், 28 அரைசதங்களும் அடங்கும். இவரது அதிகபட்ச ஸ்கோர் 232 ரன்களாகும்.

ஒருநாள் மற்றும் டி20: 2013 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 40 ஒருநாள் போட்டிகளிலும், 9 டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் இக்கட்டான காலக்கட்டங்களில் தனது நிதானமான ஆட்டத்தால் பல வெற்றிகளைத் தேடித்தந்த கவாஜாவின் ஓய்வு, அந்நாட்டு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.